இந்தியத் துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்), மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோருக்கும் இடையில் நேற்று தனித்தனியாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தும், கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு எதிர்கால வளர்ச்சி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக போர் சூழலில் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்கள், ஊனமுற்றோருக்கான வாழ்வாதார வாய்ப்புகள், மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, இந்தியத் துணை உயர் ஸ்தானிகர், இலங்கையுடனான நீண்டகால அபிவிருத்தி கூட்டாண்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபையை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுதான் முன்னோக்கு என்று இந்திய அரசின் நிலைப்பாட்டை துணை உயர் ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.