November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: போராட்டம் தொடங்கியது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான அகிம்சை போராட்டம் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் வடக்குக், கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வீதிகளில் பொலிஸாரின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சில பிரதேசங்களில் பேரணிகள் நடத்த நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா என்று பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்குமுறைகளை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.

முஸ்லிம்களும் ஆதரவு வழங்கினர்

இந்த பேரணிக்கு முஸ்லிம்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
பேரணியானது அட்டாளைச்சேனை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த போது அதனுடன் பெருமளவான முஸ்லிம்கள் இணைந்துகொண்டதுடன் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நசீரும் இணைந்தார்.

இதன்போது, ஜனாசா எரிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழர்களின் நில ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்து உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான கோசங்களும் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளதுடன், பெருமளவான பொது மக்களும் இணைந்துள்ளனர்.கட்சி வேறுபாடுகளை கடந்து, அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் என்று ஏராளமானவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

This slideshow requires JavaScript.