January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க கிழக்கில் 32 பேருக்குத் தடை

இலங்கை அரசின் அராஜகங்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா.விடம் நீதி வேண்டியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 32 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் கல்முனை நீதிவான் நீதிமன்றங்களால் இந்தத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வின்போது, மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன எனத் தெரிவித்து திருக்கோவில் பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், திருக்கோவில் பிரதேசத்தில் போராட்டத்தை நடத்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேற்படி போராட்டத்தை களுவாஞ்சிக்குடியிலும் நடத்த கொரோனாவைக் காரணம் காட்டி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.