November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை’

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் மட்டுமல்ல யாழ்ப்பாணம் தொடக்கம் கொழும்பு வரைக்கும் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் போராட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசின் அராஜக செயல்களுக்கு எதிராக – தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு கிழக்கில் களுவாஞ்சிக்குடியிலும், திருக்கோவிலிலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் கோரிக்கைக்கமைய கொரோனாவைக் காரணம் காட்டியும், ஜெனீவா விவகாரத்தை சுட்டிக்காட்டியும் நீதிமன்றங்கள் இந்தத் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளைத்தான் எமது இராணுவ வீரர்கள் கூண்டோடு அழித்தார்கள். தமிழினத்தை – தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கைகள் போரின்போதோ அல்லது போரின் பின்னரோ இங்கு நடைபெறவில்லை.

தமிழின அழிப்புக்கு எதிராக என்ற பெயரிலும் அரசுக்கு எதிராக என்ற பெயரிலும் நாட்டை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுக்கவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் போராட்டங்களை முன்னெடுக்க தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களுடன் ஒத்திசைந்து செயற்படும் தமிழ் சிவில் சமூக அமைப்பினரும் தீர்மானித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தேவையற்ற விதத்தில் இலங்கையின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கின்றார். அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் இங்குள்ள சிலர் செயற்பட்டு வருகினறனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் மட்டுமல்ல யாழ்ப்பாணம் தொடக்கம் கொழும்பு வரைக்கும் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் போராட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

நாடு கொரோனாத் தாக்கத்துக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், இப்படியான போராட்டங்கள் தேவைதானா என்பதைத் தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்.

தற்போதைய நிலைமையில் தேவையற்ற போராட்டங்களைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கும் நீதிமன்றங்களுக்கும் உண்டு. நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.