July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தனி நாடு அமைக்க முயற்சிப்பவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டிய பொறுப்புள்ளது’

அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்பவர்கள் மற்றும் தனி நாடு அமைக்க முயற்சிப்பவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் பொலிஸாருக்கு உள்ளதாக ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்  தொடர்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

எனவே சர்வதேச ரீதியிலுள்ள புலம்பெயர் குழுவினர் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டதாக காண்பிக்கவே இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எந்தவித காரணங்களுமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிநாடு அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது என அஜித்ரோஹண  தெரிவித்துள்ளார்.