
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது, இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அறிவியல் ஆதாரங்களுடன் விரிவாக பதிலளிப்பதற்கு தயாராக இருப்பதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 30/1 தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஏற்கனவே தெரிவித்துள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.
முந்தைய நிர்வாகம் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது இலங்கை பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கப்பட்ட போதிலும், இவ் நிபந்தனைகளுக்கு இணங்க இலங்கையின் அரசியலமைப்பில் ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 22 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் இலங்கை தூதுக்குழுவிற்கு வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்குவார் என கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இந்த அமர்வு ஒரு மெய்நிகர் உச்சி மாநாடாக இருக்கக்கூடும், எனவே சரியான நேரத்தில் போதுமான பிரதிநிதித்துவம் செய்யப்படும் என்றார்.