November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம்!

File Photo

இலங்கையின் மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் நில அதிர்வுகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக் காலமாக பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் வலப்பனை, ரிதிமாலியத்த ஆகிய பிரதேசங்களில் 2 ரிச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியிருந்தது. இதனால் அந்தப் பகுதி மக்களிடையே அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்கு பதிவாகும் நில அதிர்வுகள் குறித்து புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தினரும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் புவியியல் ஆய்வாளர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த அதிர்வுகளுக்கும், மலைநாட்டில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களுக்கும் இடையே தொடர்புகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இது குறித்து பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியல் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன குறிப்பிடுகையில், நில அதிர்வுகள் எவ்வாறு ஏற்படுகின்றது என்று ஆராய்ப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக் கூடுமெனவும், அது எந்த அளவில் ஏற்படும் என்பதனை கூற முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்த பிரதேசங்களில் நிலத்தடியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவதற்காக அதிர்வு மானிகளை பொறுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும். அதன் மூலம் காரணத்தை சரியாக அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.