Photo: Facebook/ srilanka ports authority
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீர்மானித்துள்ள இலங்கை அரசாங்கம், அதற்கு பதிலாக மேற்கு முனையத்தை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இணை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்படி மேற்கு முனையம் தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தி அவர்களால் பெயர் குறிப்பிடப்படும் நிறுவனங்களுக்கு முதலீட்டு நடவடிக்கைகளுக்காக வழங்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
35 வருட குத்தகை அடிப்படையில் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தில் மேற்கு முனையத்தை தனியார் முதலீட்டுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கையெடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதன்படி அதனை அபிவிருத்தி செய்ய முன்வரும் தனியார் நிறுவனத்திற்கு அதனை வழங்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.