May 2, 2025 18:21:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாத்தல் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வர் நடவடிக்கை

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கும் தொல்பொருள் திணைக்களத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

எமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு ஏதுவானவகையிலும் எங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள மரபுரிமை சின்னங்களை நாமே பாதுகாக்கும் நோக்குடனும் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கின்ற, பராமரிக்கின்ற பொறுப்பினை எமக்கு வழங்கவேண்டும் என்று முதல்வர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் குறித்த மரபுரிமை சின்னங்களை முழுமையாக கையளிக்காதுவிடினும் ஒப்பந்த அடிப்படையில் குறித்த மரவுரிமை சின்னங்களை பாதுகாக்கின்ற உரிமையை மாநகர சபைக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி, இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றினை தருமாறும் அதற்குரிய அனுமதிக்கு முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

முக்கியமாக சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு மற்றும் வளைவு, யமுனா ஏரி ஆகிய தமிழர் மரபுரிமை சின்னங்களை பாதுகாத்து பராமரிப்பது தொடர்பில் யாழ்.மாநகர சபையும் தொல்பொருள் திணைக்களமும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இடங்களில் மரபுரிமை சின்னங்களின் வரலாற்றினை மூன்று மொழிகளிலும் இடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலுக்கு பிற்பாடு தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் யாழ்.கோட்டை, யமுனா ஏரி, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோப்பு ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்.கோட்டைப்பகுதியை சுற்றிய வெளிப் பகுதி குறிப்பாக முத்தவெளி பகுதியில் வளர்ந்திருக்கின்ற பாதீனியச் செடிகள் மற்றும் புற்களை அகற்றி குறித்த பகுதியை யாழ்.மாநகர சபையும் தொல் பொருள் திணைக்களமும் இணைந்து தூய்மைப்படுத்துவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.