அரசாங்கத்தின் உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர்நீதிமன்றத்தில் இன்று (23) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அரசியலமைப்புக்கு முரணான வகையிலும், அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலுமே தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போது, அதனை நீக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தி சபைக்குள் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தாம் இந்த திருத்தத்தை நிறைவேற்ற விடமாட்டோம் எனவும், இதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கையெடுப்போம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.