மியன்மாரின் தற்போதைய நிலைமை இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை என முன்னாள் வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மியன்மாரை அந்நாட்டு இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிவிலியன் / நிர்வாக அதிகாரத்தின் பாதையில் இராணுவத்தினரை கொண்டுவந்து நிறுத்தினால், மக்கள் ஆணையின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல் ஆணையத்தின் வேலையையும் நீதித்துறையின் வேலையையும் தாங்களே செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதை தவிர்க்க முடியாது. எனவும் குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மார் இராணுவத்தினர், ஆளும் கட்சியின் தலைவர் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களைக் கைதுசெய்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமைக்கு சர்வதேச அமைப்புகளுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மியன்மாரின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த அவசர காலநிலை ஒரு வருடகாலத்திற்கு நீடிக்கும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.