
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என நம்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமக்கு அறிவித்துள்ளதாகவும், இலங்கை அரச தலைமைகளும் பல தடவைகள் இதே வாக்குறுதியை தமக்கு வழங்கியுள்ளதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சுட்டிகாட்டியுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதாக இலங்கை அமைச்சரவை மூன்று மாதங்களுக்கு முன்னர் தீர்மானமொன்றை எடுத்திருந்தது.
எனவே இதுவரை காலமாக எடுக்கப்பட்ட இணக்கப்பாடு அடிப்படையில் சகலரும் செயற்பட வேண்டும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கே முழுமையான உரிமமும் செல்லும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அது குறித்த இந்தியாவின் நிலைபாட்டை அறிவிக்கும் விதமாகவே இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.