இலங்கையின் துஷ்பிரயோகங்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நிரூபிக்கும் வகையில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள 93 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“திறந்த காயங்கள் மற்றும் பெருகிவரும் பேராபத்துக்கள்: கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைத் தடுக்கும் இலங்கை” என்ற தலைப்பில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை வழங்கும் விதமாகவும் ஐநாவின் தீர்மானம் அமைய வேண்டுமென்று தெரிவித்துள்ளது.
ஐநா அமர்வில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றங்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வகையிலும், தற்போது நடைபெற்று வரும் துஷ்பிரயோகங்களை கண்டிக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் அமைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நீதி மீதான தாக்குதல்கள் இன்றும் எதிர்காலத்திலும் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும் அபாயத்தைக் காட்டுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைச்சின் ஜெனீவாவுக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, பொது மக்களைப் பாதுகாக்கும் ஐநாவின் நெறிமுறை சார்ந்த தோல்வி அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலைகள், கற்பழிப்புகள் உட்பட ஏராளமான போர்க் குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவும் நேரடி பொறுப்புடையவர்கள் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ, போர்க் குற்றங்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உடைய அதிகாரிகளைப் பதவிகளுக்கு நியமித்ததோடு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றை மறுத்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஊடகங்கள் சுய தணிக்கையோடு செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மீது இம்முறை கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றத் தவறுவது, உலகெங்கிலும் உள்ள அநியாயக்காரர்களுக்கு மோசமான செய்திகயைக் கொண்டு செல்லும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோடிட்டுக் காட்டியுள்ளது.