கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூறு வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இவ்வாறாக உறுதியளித்து தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அரசாங்கத்தின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கக் கூடாது என்ற கொள்கைகளுக்கமைய கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிடமும் கையளிக்க மாட்டோம் என்று இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்படி கிழக்கு முனையம், முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக தொடர்ந்தும் இயங்கும் என்று அவர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாகவும், இதனால் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.