இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதியினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதும் தேசிய கீதம் இசைக்கப்படும் எனவும், அது சிங்கள மொழியில் மாத்திரமே இடம்பெறும் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி வைக்கும் போது சிங்களத்திலும், நிகழ்வு நிறைவடைந்த பின்னர் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கம் கடந்த வருடம் முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை தவிர்க்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.