November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெறவிருக்கும் அஹிம்சை வழி போராட்டம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதேநேரம் வடக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது இந்த அஹிம்சை வழி போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைபடுத்தக் கோரியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையில் எதிர்வரும்  3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நான்கு நாட்கள் போராட்டம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.