இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் கொழும்பு, நீர்கொழுப்பு மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்காரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவினர் 15 மாதங்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபர், புலனாய்வுத் துறை அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்ததுடன், கடந்த 28 ஆம் திகதி தமது விசாரணை நடவடிக்கைகளை பூர்த்தி செய்திருந்தனர்.
இதன்படி தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை அந்த ஆணைக்குழுவினரால் இன்று முற்பகல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், சம்பவத்திற்கு காரணமானவர்கள், பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பான விபரங்களும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.