இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் செறிவாக வாழும் மலையகப் பகுதியில் கல்வியை முன்னேற்றும் நோக்கோடு மலையக மாணவர்களை மையப்படுத்திய தனியான பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான உறுதிமொழியையும் வழங்கியிருந்தார். ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புதிய அரசின் உயர்மட்டத்துடன் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக கூறுகின்றது.
அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உயர்கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.