பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் 5 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள், தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை சீஎல்எப் காரியாலயத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
பெப்ரவரி 6 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையில் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகவும், அந்தப் பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அதற்கு முதல்நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த பேச்சுவார்த்தைகளில் முதலாளிமார் சம்மேளனத்தினர் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 25 ரூபாவால் உயர்த்தி, மேலும் 50 ரூபாய் கொடுப்பனவுடன் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்ளிட்ட உற்பத்தி திறன் அடங்கிய தொகை அடங்கலாக ஆயிரம் ரூபாவை வழங்க சம்மதித்துள்ளதாகவும், ஆனால் அதற்கு தாம் இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒற்றுமையை காட்டும் வகையில் 5 ஆம் திகதி பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும், இந்த போராட்டம் இந்த பணிபகிஷ்கரிப்பு அரசாங்கத்திற்கு எதிரானது அல்லவெனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.