November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் அனுமதிக்காகக் காத்திருக்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிகள்!

இலங்கையின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை
ஸ்புட்னிக் வி   கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் குறித்த தடுப்பு மருந்தை உள்நாட்டில் தயாரிக்க ரஷ்யா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் கொழும்பு சண்டே அப்சர்வர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இரு நாடுகளும் கடந்த ஆண்டு 300 மில்லியன் ரஷ்ய தடுப்பூசிகளை இந்திய ஆய்வுக்கூடங்களில் தயாரிப்பது குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் உயர் மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அங்கீகாரம் அளித்துள்ள போதிலும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இரண்டு தடுப்பூசிகளையும் அவசரக்கால பயன்பாட்டிற்கேனும் அனுமதிக்கவில்லை என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீன தனது கொரோனா தடுப்பு மருந்தான  “சினோபோர்மின்” க்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்கத் தயாராக உள்ளதாக சீனாவுக்கான தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளதாகக் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.