July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சர்வதேச தடைகள் குறித்து அச்சமில்லை ; ஐநா பாதுகாப்பு பேரவையில் ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு உதவும்’

தடைகள் குறித்த அச்சம் காரணமாக நாங்கள் இழைக்காத குற்றங்களை இழைத்ததாக ஏற்றுக்கொள்ளமாட்டோம்  என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

தடைகள் ஏதாவது விதிக்கப்படும் என்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையே அதனைச் செய்ய வேண்டும் எனினும் எமக்கு உதவ ரஸ்யாவும் சீனாவும் பாதுகாப்புச்சபையில் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கத்தின் முடிவு புத்திசாலித்தனமானது. தற்போது எங்களால் சுதந்திரமாகப் பதில்களை வழங்க முடியும் அதனையே நாங்கள் செய்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களைக் கொண்டு வரலாம் ஆனால் நாங்கள் அதற்குக் கட்டுப்பட வேண்டியதில்லை என தெரிவித்துள்ளதுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவை எழுப்பிய கேள்விகளுக்கு முன்னைய அரசாங்கத்தினால் உரிய பதில்களை வழங்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

முன்னர் இணை அனுசரணை வழங்கியதால் எங்களுக்குப் பொறுப்பு இருந்தது ஆனால் தற்போது அது இல்லை. குற்றச்சாட்டு குறித்து நாங்கள் பதில் அளிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை சமர்ப்பித்துள்ள பதில் அறிக்கை குறித்து சாதகமான பதில் கிடைக்கும் என அமைச்சர் சரத்வீரசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.