
எமது பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்குத் தேசிய நல்லிணக்கம் அவசியம். பேச்சுவார்த்தைகள் ஊடாகவும் புரிந்துணர்வின் ஊடாகவும் எமது தீர்வுகளை எட்டமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நானும் இம்மண்ணில் பிறந்து வளர்ந்த ஒருவன். ஆனாலும் அன்றைய கால அரசியல் நிலைமைகள் என்னை வேறு ஒரு திசை நோக்கி அழைத்துச் சென்றுவிட்டது என்றார்.
அதனால் நாம் திசைதிருப்பப்பட்டு அப்போது எமது மக்களின் பிரச்சினைக்கு ஆயுத போராட்டமே சரியானதென அன்று அதில் இறங்கியிருந்தோம் ஆனாலும் முரண்பாடுகள் காரணமாகப் போராட்டம் திசைமாறிவிட்டது எனவும் கூறினார்.
இந்தநிலையில் 1987களில் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து முன்னோக்கிச் செல்லலாம் என்று நாம் அரசியல் ஜனநாயக வழியில் இறங்கியிருந்தோம் என சுட்டிக்காட்டினார்.
எமது பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்குத் தேசிய நல்லிணக்கம் அவசியம் என்பதனாலேயே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டோம்.
தவறான வழிநடத்தல் காரணமாக அந்த வழிமுறை தோற்றுவிட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் தோற்றுவிடவில்லை எனவும் கூறினார்.
அதேபோன்று குறித்த சம்மேளனத்திடம் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளைப் பெற்றுத்தரத் தாம் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக உங்களுக்கு நாமல் ராஜபக்ஷ என்ற ஒரு சிறந்த அமைச்சர் உள்ளார். அவர் இளைஞர்களினதும் தமிழ் மக்களினதும் பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர் என்றார்.
அவர் உங்களுக்காக முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நானும் துணை நிற்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.