கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும் விற்பதற்கோ, குத்தகைக்கு விடுவதற்கோ அரசாங்கம் எந்தவித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனால் அது தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கு போராட்டங்களை நடத்த வேண்டிய தேவைகள் கிடையாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தங்காலையின் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
”கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் எங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனை யாருக்கும் கையளிக்க எந்தக் கலந்துரையாடலையும் நடத்தவில்லை.
இதனால் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை. என்னிடம் வந்து கதைத்தால் தெளிவுப்படுத்த முடியும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சரவையில் 99 வீதமானவர்கள் அதனை விற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இதனால் ஜனாதிபதியும் இந்த நிலைப்பாட்டுக்கு அப்பால் போகமாட்டார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.