May 28, 2025 22:38:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் துறைமுக ஊழியர்களின் போராட்டங்களை தடுக்க முடியாது”

File Photo

இலங்கையில் துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள போதும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு துறைமுக ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது.

தமது போராட்டத்தை தடுக்கும் முயற்சியாகவே ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் எத்தகைய தடைகள் போட்டாலும் தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் எனவும் இலங்கைத் துறைமுக சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் நாட்களின் தமது போராட்டத்தை விரிவுப்படுத்தவும் துறைமுக ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமையிலேயே ஜனாதிபதியினால் துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து நேற்று இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள துறைமுக சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே, ”வர்த்தமானி அல்ல எங்களை கொன்றாலும் எமது போராட்டத்தை கைவிட மாட்டோம். வெற்றிப் பெறுவதற்கே நாங்கள் போராட்டத்தில் குதித்துள்ளோம். இதனால் எங்களின் போராட்டங்களை தடுக்க முடியுமென அரசாங்கம் நினைப்பது முட்டாள்தனமானது” என்று கூறியுள்ளார்.