பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காவிட்டால் புது வடிவிலான போராட்டத்தை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பிலேயே வடிவேல் சுரேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த நல்லாட்சியின் போதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டது. அந்த சாபத்தால் தான் ஐக்கிய தேசியக்கட்சி இன்று அழிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று தற்போதைய அரசாங்கமும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாது நடந்துகொள்கின்றது. இவ்வாறாக ஏமாற்றாது உடனடியாக கூறிய சம்பளத்தை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
இதன்படி பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் சம்பள உயர்வு கிடைக்கவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டம் வேறுமாதிரியாக அமையும். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.