ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஆராய்வது அவசியமாகும். இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் சபை நடுநிலைத்தன்மையைப் பேணவில்லை என்று நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடன் இலங்கை நட்புறவுடன் செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகப் போர் முடிவடைந்த காலத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உள்ள பொறிமுறையின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையைக் கையாள வகுக்கப்பட்ட திட்டங்களை 2015 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு செயற்படுத்தவில்லை.
மனித உரிமைகள் சபை விவகாரம் கூட அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரச தலைவருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாகவே கருத வேண்டும்.
30/1 தீர்மானத்தில் உள்ளடக்கபட்ட விடயங்கள் அரசமைப்பிற்கு முரணானது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரின் போது 30/1 தீர்மானத்திலிருந்து எமது அரசு உத்தியோகபூர்வமாக விலகியது.
இந்தத் தீர்மானத்தை அரசு சுயாதீனமான முறையில் எடுத்தது. பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இம்முறை திருத்தியமைக்கப்படும். உள்ளகப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்குக் கொண்டு சென்று ஒரு தரப்பினர் இலாபமடைகின்றார்கள். இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.