July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்துடன் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், பேரவையின் ஆணையாளர் மிஷேல் பச்சலேட்- இன் அலுவலகத்துடன் இறுதிக்கட்டப் பேச்சுக்களை இலங்கை நடத்திவருகின்றது.

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டிருந்த காட்டமான அறிக்கை தொடர்பிலேயே இந்த பேச்சு நடந்துவருவதாக வெளியுறவு அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆணையாளரின் அறிக்கைக்கான தமது பதிலை வெளியிட முன்னதாக அவரது அலுவலகத்துடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்த இலங்கை முயன்றுவருகின்றது.

“அவர் எழுப்பியுள்ள சில விடயங்கள் தொடர்பில் ஒரு இணக்கப்பாடொன்றை எட்டவே நாம் முயற்சிக்கின்றோம். எமது அதிகாரபூர்வமான பதில் ஒன்றை பின்னர் வெளியிடுவோம்” என்று வெளியுறவு அமைச்சின் தகவல்கள் கூறியுள்ளன.

இலங்கையின் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரத்தால் “அச்சம்” அடைந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் உரிமை மீறல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 27ம் திகதி வெளியாகியிருந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை கூறியிருந்தது.

‘ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு சொத்து முடக்கம், பயணத் தடை எச்சரிக்கையை விடுத்துள்ளார்’

‘மனித உரிமைகள் கடுமையாக மீறப்படும் அபாயகரமான பாதையில் இலங்கை’: ஐநா அறிக்கை

‘மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையை நிறைவேற்ற கனடா நடவடிக்கை எடுக்கவேண்டும்’

‘20 ஆவது திருத்தம்’ தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் விசனம்!

இலங்கையில் குற்றம் இழைத்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக, உலகளாவிய வழக்கு-அதிகார எல்லை (நியாயாதிக்கம்) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வழக்குகளை தொடரவும், பயணத்தடை, சொத்துத் தடை உள்ளிட்ட சர்வதேசத் தடைகளை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநாவின் உறுப்புநாடுகளை ஆணையாளர் மிஷேல் பச்சலேட் தனது அறிக்கையில் கோரியிருந்தார்.

இலங்கையின் பொறுப்பேற்கும் தன்மை உள்ளிட்ட மனித உரிமைகள் நிலவரத்தை கண்காணித்து அறிக்கையிடவும், எதிர்கால சட்ட நட்டவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரித்து பாதுகாக்கவும், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பியவர்களுக்காக குரல்கொடுக்கவும் உறுப்புநாடுகளில் உரிய நீதிவிசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவுவதற்கும் கூடிய விதத்தில் தமது அலுவலகத்தின் அதிகார வரம்பை விரிவுபடுத்துமாறும் ஆணையாளர் பச்சலேட் மனித உரிமைகள் பேரவையை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.