January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்களும், கண்காணிப்பும் இருக்க வேண்டும்”

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதத்தில் சர்வதேச நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேநேரம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நகர்வுகளில் இலங்கையின் தொடர்ச்சியான ஏமாற்று போக்கை கண்டித்து நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவருமென தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பச்லெட்டின் மதிப்பீட்டு அறிக்கையானது இலங்கைக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

இதுவரை காலமாக மனித உரிமைகள் பேரவை இலங்கை விடயத்தில் கண்காணித்த, வலியுறுத்திய விடயங்களை முழுமையாக அறிக்கையாக அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கடிதம் மூலமாக நாம் கூறிய விடயங்களையே இப்போது மனித உரிமைகள் ஆணையாளரும் முன்வைத்துள்ளார். எனவே அவரது அறிக்கையை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு முன்னைய அரசாங்கம் எழுத்து மூலமாக வாக்குறுதிகளை கொடுத்த போதும், பொறுப்புக்கூறல், நல்லிணக்க வேலைத்திட்டங்களை அவர்கள் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் என்பதை மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார், எனவே அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள நாமும்  முயற்சிக்க வேண்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றமொன்று இடம்பெற்றுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை மீறியுள்ளமை மட்டுமல்லாது தாம் பொறுப்புக்கூறல் விடயங்களுக்கு தயாரில்லாமல் இருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நடைபெறவுள்ள 46 ஆம் கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவரும் என நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதத்தில் சர்வதேச நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்கும்,  அதேபோல் இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பும் அழுத்தங்களும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.