
Photo: Facebook/ Douglas Devananda
தமிழ்த் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும், ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே தன்னால் முன்னெடுக்க முடியும் என்பதனால் அதற்கு அவர்கள் ஒத்துப்போவார்களா? என்ற கேள்விகள் தன்னுள் எழுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகள் என கூறுபவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக்கி தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே மக்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து பல பேச்சுக்களை நடத்தியுள்ளனர் அவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி, தான் தனியாக செயல்பட வேண்டுமென வெளியே நிற்கிறது. இவ்வாறு ஒரே நிலைப்பாட்டில் வர முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க போகிறார்கள் என்றும் அமைச்சர் டக்ளல் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களுடைய பிரச்சினையை உண்மையில் தீர்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பவேண்டுமே அல்லாமல் பத்திரிகை விளம்பரத்துக்காக பேசுகிறோமென பாசாங்கு செய்ய கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.