
தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களே இன்று அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது. ஜனாதிபதியும் இது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஆனால் அவரின் உத்தரவைக்கூட கம்பனிகள் ஏற்பதாகத் தெரியவில்லை என திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே கம்பனிகளை ஒரு நிலைக்கு கொண்டுவரமுடியும் எனவும், ஆனால் இதனை செய்வதற்கு மாற்று தரப்பினர் தயாராக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கமே அறிவித்தது. எனவே, அதற்கு அழுத்தங்கள் கொடுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிடவேண்டாம். சம்பள விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.