கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்திற்கு எதிராக நாடுபூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தீர்மானித்துள்ளது.
தமது போராட்டத்தின் ஆரம்பக்கட்டமாக எதிர்வரும் முதலாம் திகதி தமது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளங்களையும், சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடிப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கையெடுப்போம் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகம் என்பது இலங்கை பொருளாதாரத்தின் இதயத்தை போன்றது. ஏற்கனவே இந்த துறைமுகத்தின் சில பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளனதாக சுட்டிக்காட்டியுள்ள அனுரகுமார, இந்நிலையில் எஞ்சியுள்ள கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.