கிழக்கு மாகாணத்தில் 14,010 கொரோனா தடுப்பூசிகள் 258 நிலையங்களில் செலுத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ. லதாகரன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இன்றைய தினம் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள சுகாதார ஊழியர்களுக்கும் சுகாதார துறையில் ஈடுபடுகின்றவர்களுக்கும் 113 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் தொடர்ந்து சில தினங்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக சுகாதார திணைக்களத்தின் கீழ் 258 நிலையங்களில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு 2 ஆயிரத்து 670, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 3 ஆயிரத்து 400, கல்முனை பிராந்தியத்தில் 4 ஆயிரத்து 870, அம்பாறை பிராந்தியத்தில் 3 ஆயிரத்து 70 தடுப்பூசிகள் உட்பட 14 ஆயிரத்து 10 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
எனவே தடுப்பூசியால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அவதானித்து முடித்துள்ளோம் எனவும் சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஒவ்வொரு பிராந்தியத்திலும் விசேட குழுக்கள் ஆரம்பித்து அந்த குழு தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.