மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கி அச்சுறுத்தும் காணொளிகள் நேற்று ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அவரின் செயற்பாடுகளைக் கண்டித்தும், தமிழர்களின் பாரம்பரிய காணிகளை தொல்பொருள் பூமி என்ற பெயரில் அரசு கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
“இன-நல்லுறவுக்கு பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பொலிஸார் தங்கள் கடமையை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்கார்ர்கள் கோஷமிட்டனர்.
தொல்பொருள் திணைக்களத்தால் அடையளப்படுத்தபட்ட காணியின் முன்றலில் பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்தின் பின்னணி
உள்ளூர் ஊடகவியலாளர்களின் கருத்துப்படி:“நீண்ட காலமாக விவசாயம் செய்கை பண்ணப்பட்டு வந்த, தமிழருக்கு சொந்தமான காணி அமைந்துள்ள பிரதேத்தில் புராதன சிங்கள பௌத்த சின்னங்கள் இருந்ததாகக் கூறி 2 ஆண்டுகளுக்கு முன்னர் மங்களராமய விகாராதிபதி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு தொல்பொருள் அடையாளங்கள் காணப்பட்ட பகுதி மாத்திரம் அடையாளமிடப்பட்டு மிகுதி பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிநே சுமணரத்ன தேரர் குறித்த இடத்துக்கு வந்து, விகாரைக்குரிய காணி 200 ஏக்கர் உள்ளது. காணிக்கு உரிமை கோருவோர், விவசாயம் செய்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வருமாறு அழைத்து அங்கு வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரைக் கடுமையாகத் தாக்கி தகரக் கொட்டில் ஒன்றுக்குள் சிறைப்பிடித்து வைத்திருந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.
தினமும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யும் அத்துமீறல்களைக் கண்டித்தும், அதிகாரிகளைத் தாக்கியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது”.