January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் இன்று 5,286 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’

இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளை இலங்கை மக்களுக்கு செலுத்தும் வேலைத்திட்டத்தில் இன்று மாலை வரையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தின் 10 பிரதான வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக கொவிட் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாகவும், இதன்படி இன்று மாலை 6 மணி வரையில் 5,286 பேருக்கு அவை செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் வெக்சின் மைத்ரி திட்டத்தின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவற்றை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளித்திருந்தார்.

இதனையடுத்து பாதுகாப்பாக பிரதான வைத்தியசாலைகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டதுடன், இன்று காலை முதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததன.

இதன்போது கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் மூவருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐடிஎச் வைத்தியசாலை வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம சுகாதார தரப்பினருக்கான முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார்.

இதன்பின்னர் மேல் மாகாணத்தில் மற்றைய பிரதான வைத்திசாலைகளில் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்திற்கு வெளியிலுள்ள பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11,080 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் பணி நாளை தொடக்கம் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.