
ஏனைய மாகாணங்களின் காணி ஆணையாளர்களை போன்று வடக்கு மாகாணத்தின் காணி ஆணையாளருக்கும் உரிய அதிகாரங்களை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் சில தினங்களில் சம்பந்தப்பட்ட ஆணையாளருக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கரைச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாகாண ஆணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் கணிசமானவை வடக்கு மாகாண ஆணையாளருக்கு வழங்கப்பட்டாமல் இருந்தது. இந்த விடயம் சம்பந்தப்பட்ட ஆணையாளரினால் தனக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விவகாரத்தினை மத்திய அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, குறித்த அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.