July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழரின் உரிமையை வென்றெடுக்க உலக நாடுகள் வரை எமது குரல் ஒலிக்க வேண்டும்”

இலங்கைக்கு ஆங்கிலேயரினால் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை. இதனால் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் சிவில் அமைப்புகளினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கின் பூர்வீக குடிகளாகிய நாம் எமது உரிமைக்காக 60 ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்றோம். தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காது வடக்கு, கிழக்கினை இராணுவ ஆட்சியாக மாற்றிக்கொண்டு வரும் இலங்கை அரசு தமிழர்களின் இருப்பினை இல்லாதொழிக்கவும், தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதற்காகவும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்வேறு திணைக்களங்கள் மூலமாகவும் பௌத்த மயமாக்கலை முன்னெடுத்துவரும் இலங்கை அரசு தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் தடைகளை விதிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.

வடக்கில் குருந்தூர் மலை ஐயனார் கோவில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில் மற்றும் கிழக்கில் கண்ணியா பிள்ளையார் கோயில், குசனார் முருகன் ஆலயம் போன்ற தமிழர்களின் பல்வேறு இடங்களிலும் தமிழர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இடமளிக்காது பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு மட்டுமல்லாது முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழர்களுக்கான உரிமையினை வென்றெடுக்க உலக நாடுகள் வரை எம் தமிழர்களின் குரல் எழ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.