July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை பெரும் கடன் பொறியில் சிக்கிவிட்டது’ -சம்பிக்க ரணவக்க

(Photo:Patali Champika Ranawaka/FaceBook)

இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கம் 7000 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் இலங்கை பாரிய கடன் பொறிக்குள்  இப்போதே சிக்கிவிட்டதாகவும் ரூபாவின் விலை வீழ்ச்சி கண்டதன் காரணமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய வங்கியினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தைக்கு கொடுத்ததன் மூலமாகவே இப்போது ரூபாவின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இந்த ஆண்டில்  சர்வதேச கடனாக செலுத்த வேண்டிய தொகையை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லை என்பதைவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் 660 பில்லியன் ரூபா பணத்தை அச்சடித்துள்ளதாகவும் அதனாலேயே தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான கடன் நெருக்கடியில் இலங்கை விழப்போகிறது எனவும் எம்மால் கடன்களை மீண்டும் செலுத்த முடியாத அளவிற்கு எமது நிலைமைகள் உருவாகி வருகின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.