கிளிநொச்சி நகரில் நூலகத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள காணிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் விடுத்த கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அரச திணைக்களங்கள் ஒவ்வொன்றும் தமக்கு பாராதீனப்படுத்த வேண்டிய காணிகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
எந்த நகரத்திலும் இல்லாதவாறு ஏற்கனவே கிளிநொச்சியில் பல காணிகளை இராணுவம் சுவீகரித்து வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மாவட்ட செயலகத்துக்குள்ளேயே காணியின் ஒரு பகுதியை இராணுவம் சுவீகரித்து வைத்திருக்கிறது என்றும், இவ்வாறு நகருக்குள் பல ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதேவேளை இந்த தீர்மானத்தை நிறைவேற்றவேண்டாம் என நாடளுமன்ற உறுப்பினர் விடாப்பிடியாக இருந்ததை தொடர்ந்து இராணுவத்திற்கு குறித்த காணியை பாராதீனப்படுத்தும் திட்டம் நிறைவேற்றாமல் கைவிடப்பட்டது.