July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை, உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட்- 19 தடுப்பூசி செலுத்தும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்று மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 2,300 கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள் கோரப்பட்டுள்ளதுடன் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இன்று பெற்றுக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு செலுத்தும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னார் மாவட்டத்திலும் நாளைய தினம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அந்தவகையில் முதல் கட்டமாக 1280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் முதலில் சுகாதார துறையினருக்கும் 2 ஆம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.