July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார பாதுகாப்புக்காக 120 பாடசாலைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவி

கொவிட்-19 தொற்றுப்பரவலின் போது மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக இலங்கையில் 120 பாடசாலைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் சுகாதார அறைகளை அமைத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம், அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி முகவரமைப்பான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) உடாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வலய மற்றும் மாகாண பாடசாலைகளில் அமெரிக்க சுகாதார அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வினை பாதுகாக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த சுகாதார அறைகளில் படுக்கைகள், மெத்தைகள், முதலுதவி உபகரணங்கள், நகர்த்தக்கூடிய மறைப்பு திரைகள், மற்றும் நீர் விநியோகிப்பான்கள், உள்ளிட்ட பல வசதிகளை மாணவர்களுக்கான கவனிப்பை வழங்குகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், கண்டி, மொனராகலை, மற்றும் கம்பஹாவில் இந்த சுகாதார அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு கொரோனா பரவல் முடிவடைந்த பின்னரும் மாணவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும் என்பதோடு ஏனைய சுகாதார சேவைகளையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு வழங்கியுள்ள 6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கொவிட்-19 உதவியின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.