November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மொத்த மீன் சந்தை திருகோணமலை நகரசபைக்குக் கீழ் செயற்பட வேண்டும்”: நகரசபை உறுப்பினர் உண்ணாவிரதப் போராட்டம்

திருகோணமலை நகரசபையின் கீழ் மீண்டும் மொத்த மீன் சந்தை செயற்பட வேண்டும் எனவும் அதன் வரிப்பணம் நகர மக்களின் அபிவிருத்திக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து திருகோணமலை நகரசபை உறுப்பினர் எஸ்.சிவகுமார் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

உள்ளூராட்சி சட்டப்படி ஒரு நகரில் இருக்கும் சந்தைகள் அந்தந்த நகரசபை அல்லது பிரதேசசபையின் கீழ் தான் செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை நகர மணிக்கூட்டு அருகே உள்ள அதிக வருமானம் பெறும் மொத்த மீன் சந்தை 2012 ஆம் ஆண்டு தொடக்கம் கடற்தொழில் கூட்டுத்தாபனத்திற்குக் கீழ் செயல்படுகின்றது.

2016 ஆம் ஆண்டு வரை 40 வீதம் நகரசபைக்குச் செலுத்தப்பட்ட வரி அதன் பின் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மீன் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள் கடற்தொழில் கூட்டுத்தாபனத்திற்கு வரிப்பணம் செலுத்துவதனால் நகரசபைக்கு அந்த வரிப் பணம் கிடைப்பதில்லை.

அதனால் நகர அபிவிருத்தியை மந்தம் அடையச் செய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நிலை மாறவேண்டும் எனவும் நகர சபையின் கீழ் மொத்த மீன் சந்தை கொண்டுவரப்பட வேண்டும் என்றே  இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளாக நகர சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருகோணமலை நகரசபைத் தலைவர் நா. இராஜநாயகம், உபதலைவர் கா. கோகுல்ராஜ் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நகரசபை உறுப்பினருடன் கலந்துரையாடினார்கள்.

இதன் போது இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் போராட்டத்தை கைவிடும்படியும் கேட்டுக்கொண்டனர்.