(File Photo)
யாழ். மாவட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை அரசாங்கம் கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும் என்று வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் எஸ்.எம்.சார்ள்ஸுக்கு கடிதம் மூலம் எடுத்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தேசியப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாணவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். இவ்வாறான பாகுபாடு ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அவை வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இருந்து கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் கடந்த வாரம் செய்தி வெளியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபை இயங்கிய காலத்தில் இவ்வாறான முயற்சிகள் யாவும் இங்கே மறுதலிக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
இந்த நிர்வாக அதிகார மாற்றத்தின் தர்க்கவியல் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. அதாவது நிர்வாக குறைபாடுகள் காரணமாக இருப்பினும் அவை மாகாண சபையினால் சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை இல்லாத ஒரு சூழ் நிலையில் இவ்வாறு செய்வது ஜனநாயக விரோதமானது எனவும் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநருக்கு, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.