File Photo
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு, திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான இயக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி துறைமுகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தமக்குறிய பணிகள் தவிர்ந்த வேறு பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்பதுடன், மேலதிக நேர பணிகளிலும் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகவே சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இதன் பின்னரும் அரசாங்கம் தமது திட்டங்களை கைவிடாவிட்டால் நாடு பூராகவும் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அந்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை கிழக்கு முனைய விவகாரம் தொடர்பாக இன்றைய தினத்தில் ஜனாதிபதிக்கும் அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்றும் நடத்தப்படவுள்ளது.