January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மண்ணின் குரலாய் மணம் வீசிய மல்லிகை’ டொமினிக் ஜீவா மறைந்தார்

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் சஞ்சிகை பதிப்பாளருமான டொமினிக் ஜீவா  தனது 94 வது வயதில் இன்று (28 ஜனவரி 2021) காலமானார்.

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த டொமினிக், யாழ் சென். மேரிஸ் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்றார்.

ஐந்தாம் வகுப்புடன் தனது பள்ளிக் கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவர், 1940களில் இலக்கிய உலகில் கால் பதித்து விளிம்புநிலை மக்களின் உணர்வாய் பிரவாகித்தார்.

தமிழகத்தில் பொதுவுடமைத் தலைவராக விளங்கிய ப. ஜீவானந்தம் அரசியல் சூழல் காரணமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்தில், அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தன் பெயருடன் ஜீவாவையும் சேர்த்துக்கொண்டு டொமினிக் ஜீவாவாக மாறினார் அவர்.

1966 இல் மல்லிகை இதழை ஆரம்பித்து சுமார் அரை நூற்றாண்டு காலம் அதை இடைவிடாது நடத்தி வந்தார்.

மண்ணை நேசிக்கும் மனிதராய் பல்வேறு சிறுகதை நூல்களையும் கட்டுரைத் தொகுப்புகளையும் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ள மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, உலகின் பல நாடுகளுக்கும் இலக்கியப் பயணங்கள் மேற்கொண்டு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தண்ணீரும் கண்ணீரும் (1960), பாதுகை (1962), சாலையின் திருப்பம் (1967), வாழ்வின் தரிசனங்கள் (2010) உள்ளிட்ட இவரது சிறுகதைத் தொகுப்புகள் பெரிதும் பேசப்பட்டவை. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்  (1999) என்ற அவரது வாழ்க்கைச் சரிதை நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

முதுமையிலும் தனது எழுத்துப் பணியை நீண்டகாலமாக ஆற்றி வந்த மல்லிகை ஆசிரியர், உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முற்போக்கு சிந்தனையும் திறனாய்வுத் திறனும் பேச்சாற்றலும் இயல்பாகவே கைவரப் பெற்ற ஒரு பன்முக ஆளுமையாளராக வலம் வந்த ‘படிக்காத மேதை’ டொமினிக் ஜீவாவின் பெயர் இந்தத் தமிழ்கூறும் நல்லுலகு உள்ள வரை நீடித்து நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.