January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு,கிழக்கில் இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு வட,கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ள இந்தப் போராட்டம் தொடர்பில் சிவில் சமூகம் விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசினால் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பும் தொடர்வதனை வெளிக்கொணரும் வகையில் வடக்கு, கிழக்கில் செயல்படும் சிவில் அமைப்புகள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிக்கின்றது.

இதேநேரம், குறித்த போராட்டத்தில் அனைவரும் பங்குகொண்டு வடக்கு, கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள், மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றமை, செயல்பாட்டாளர்களின் பேச்சுரிமை மீறல் ஆகியவற்றோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை போன்ற செயல்களைக் கண்டித்து இடம்பெறும் இப்போராட்டத்திற்கு எமது ஆதரவோடு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பினையும் விடுக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.