20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராயவென 11 பேர் கொண்ட விசேட குழுவொன்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு கூட்டம் நேற்று (21) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது நாளை கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்தின் போது முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் மற்றும் 20 ஆம் திருத்த யோசனைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாயின் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.
இதன்படி 20 ஆம் திருத்தம் குறித்து ஆராயவென விசேட குழுவொன்றை அமைக்க சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.20 ஆம் திருத்த சட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், அதில் நாட்டினை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு செல்ல ஏதுவான காரணிகள், 20 ஆம் திருத்தத்தை தடுக்க சட்ட ரீதியில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் என்பன குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் விதத்தில் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, கபீர் ஹசீம், மனோ கணேசன், இரான் விக்ரமரத்ன, இம்தியாஸ் பாக்கிர்மாக்கர், லக்ஸ்மன் கிரியெல்ல, ஹர்ஷ டி சில்வா, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரும், கட்சியின் சார்பில் செயற்படும் சட்டத்தரணி ஷேரால் லக்ஸ்திலக , சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.