File Photo
பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
வடக்கு, கிழக்கில் தமிழின அழிப்புக்கு எதிராக இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக வடக்குக் கிழக்கு சிவில் அமைப்புகள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளன.
வடக்கு, கிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். ஆனால், தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளில் வடக்கு, கிழக்கை இராணுவ மையமாக்கி வரும் இலங்கை அரசு தமிழ் மக்களின் கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு, கிழக்கு பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காகப் பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு, கிழக்கில் உள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன எனவும் சிவில் அமைப்புகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான செயல்கள், செயற்பாட்டாளர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலையகத் தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்துக்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசு இழுத்தடிப்புச் செய்து வருகின்றதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வடக்கு- கிழக்கு தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசியல் கட்சிகள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைவரும் மேற்படி போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி கலந்துகொள்ளுமாறு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு உள்ளிட்ட வடக்குக் கிழக்கில் 20 சிவில் அமைப்புகள் இணைந்தே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.