இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
2019 நவம்பரில் டி 10 லீக் போட்டிகளின் பங்கேற்பாளர்களுக்கான ஈ.சி.பி ஊழல் தடுப்பு சட்டத்தின் மூன்று விதிமுறைகளை மீறியதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) சார்பாக ஐ.சி.சி யால் டில்ஹார லொக்குஹெட்டிகே மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதன் காரணமாக இவர் விளையாட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது.
சரத்து 2.1.1 – சர்வதேச போட்டி ஒன்றின்போது தரப்பு ஒன்று நிர்ணயிக்க அல்லது திட்டமிட அல்லது போட்டியில் முறையற்ற முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது ஏனைய அம்சங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.
சரத்து 2.1.4 – விதிமுறை சரத்து 2.1.1 இனை மீறும் வகையில் வீரர்களை நேரடியாக அணுகல், தூண்டுதல், கவர்தல் அல்லது ஊக்குவித்தல்.
சரத்து 2.4.4 – விதிமுறைகளின் கீழ் ஊழல் நடத்தை தொடர்பில் தன் மீதான அழைப்பு அல்லது அணுகல் பற்றி குறிப்பிட்ட ஊழல் தடுப்பு பிரிவுக்கு முழு விபரத்தை வெளியிட தவறுவது.
ஆகிய சரத்துகளுக்கு அமைய மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயத்தின் பெரும்பான்மையுடன் ஐ.சி.சி.க்கு டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கொண்டுவருவதற்கான அதிகாரம் இருப்பதாக ஏகமனதாக தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இலங்கை தேசிய அணியில் 2005-2013ம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடிய டில்ஹார லொகுஹெட்டிகே, 2 ரி20 போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.