July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இந்தியாவுக்கே முன்னுரிமை”

Photo: Facebook/ Ajith Nivard Cabraal

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அதிகளவில் இந்தியாவே பயன்படுத்துவதால், அதில் அந்த நாட்டுக்கு முன்னுரிமை வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும் என்று முதலீட்டு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தில் இந்தியாவே அதிகளவிலான வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிலையில் அதனை உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதால் எந்த பலனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்தியாவுக்கு அதில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பாக இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையே முத்தரப்பு இணக்கப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.