பாண் உட்பட பேக்கரி உணவு பொருட்களின் விலை பெப்ரவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்கம் வரி குறைப்பை மேற்கொண்டால் மாத்திரமே விலை அதிகரிப்பை தவிர்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பேக்கரி உற்பத்திகளின் மூலப்பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்திருப்பதனாலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு நிவாரணம் ஒன்றை வழங்குமாறு தாம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பேக்கரி உணவுகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெயின் விலை லீற்றர் ஒன்றுக்கு ஒருவருடத்துக்கு முன்னர் 250 ரூபாவாகவே இருந்ததாக தெரிவித்த அவர் தற்போது 600 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை அரசாங்கத்தினால் 250 ரூபா வரை வரி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது எனவும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பினாலே எமது நாட்டிலும் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.